தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2019 11:30 PM GMT (Updated: 19 Sep 2019 9:41 PM GMT)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தின் இதர பகுதிகளில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 நாட்களுக்கு மழை தொடரும்

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கிழக்கும், மேற்கும் சந்திக்கும் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை (இன்று) பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட, மத்திய தமிழக பகுதிகளான திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு இதேபோல் மழை தொடரும்.

இயல்பை விட அதிகம்

சென்னையை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட 39 சதவீதமும், ஜூலை மாதத்தில் 22 சதவீதமும் குறைவாக மழை பெய்தது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட 36 சதவீதமும், இந்த மாதத்தில் இதுவரை 8 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.

பருவமழை காலத்தின் பின்பகுதியில் நல்ல மழை கிடைத்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் இதுவரை 29 செ.மீ. மழை பெற்று இருக்க வேண்டும். தற்போது 32 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பதிவான மழை அளவு வருமாறு:-

திருவள்ளூர் 22 செ.மீ., பூண்டி 21 செ.மீ., அரக்கோணம் 17 செ.மீ., தாமரைப்பாக்கம் 15 செ.மீ., சோழவரம், திருவலங்காட்டில் தலா 13 செ.மீ., திருத்தணி 12 செ.மீ., எண்ணூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் தலா 11 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், மாதவரம், செங்குன்றத்தில் தலா 10 செ.மீ., சென்னை விமானநிலையம் 9 செ.மீ., பூந்தமல்லி 8 செ.மீ., போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் 7 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், நிலக்கோட்டையில் தலா 6 செ.மீ., கொளப்பாக்கம், பொன்னேரியில் தலா 5 செ.மீ., சோளிங்கர், தாம்பரம், காவேரிப்பாக்கம், செட்டிக்குளத்தில் தலா 4 செ.மீ., கருமாந்துறை, செம்பரம்பாக்கம், குழித்துறை, சத்யபாமா பல்கலைக்கழகம், திருமங்கலம், கேளம்பாக்கம், வேலூர், பென்னாகரம், அருப்புக்கோட்டையில் தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story