மாநில செய்திகள்

2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்கீழடி அகழாய்வில் வெளியான தகவல் + "||" + kizadi Excavated Published Information

2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்கீழடி அகழாய்வில் வெளியான தகவல்

2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்கீழடி அகழாய்வில் வெளியான தகவல்
2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தனர் என்ற தகவல் கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.
சென்னை,

தமிழரின் நாகரிகம் உலகில் முற்பட்டது என்பதோடு இனி இந்திய வரலாற்றை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பார்க்க வேண்டும் என்பதை சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வுகள் உறுதிப்படுத்திக்கொண்டு வருகின்றன.

இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள், தடயங்கள், கட்டுமானங்கள் ஆகியவை தமிழ் சமுதாயத்தின் மிகச்சிறந்த நாகரிகத்தை வெளிக்கொணர்ந்து ஒவ்வொருவரையும் வியக்கவைக்கின்றன. தமிழ் சமுதாயத்தின் மதிப்பை, கீழடி அகழாய்வுகள் மேலெடுத்து செல்கின்றன.

தமிழக தொல்லியல் துறையின் “கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்” என்ற புத்தகத்தை (4-ம் கட்ட ஆய்வின் தொகுப்பு) தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். அதில் இடம்பெற்று இருக்கும் தகவல்களில் சிலவற்றை கீழே காணலாம்.

நகர்மயமும், எழுத்தறிவும்

கீழடியில் காணப்படும் அகழாய்வு ஆதாரங்களின்படி தமிழர்களின் பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உணரப்படுகிறது. 4-ம் கட்ட ஆய்வில் சேகரிக்கப்பட்ட 6 கரிம மாதிரிகள், அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தன. அந்த மாதிரிகளில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று விடை கிடைத்துள்ளது. எனவே கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்ற கருத்துக்குள்வர ஏதுவாக உள்ளது.

தமிழகத்தின் நகர்மயமாதல் கி.மு. 3-ம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் தொடங்கியதாக கருதப்பட்ட நிலையில், தற்போது கிடைத்து வரும் சான்றுகள் மூலம் வைகை நதியைச் சுற்றி நகரம் உருவாகியது கி.மு.6-ம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது என்பதை தெளிவாக்குகிறது. வரலாற்றுச் சான்றுகளின்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கங்கை சமவெளிப் பகுதியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர்மயமாதல் தொடங்கியது.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான கலக்கணிப்புகள், தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டுகள் பழமையானதாக கருதச் செய்கிறது. இவையெல்லாம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்த தமிழ்ச் சமுதாயம், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிறது. அதாவது 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதைக் சுட்டிக்காட்டி மெய்சிலிர்க்கச் செய்கிறது.

வேளாண்மை

கீழடி அகழாய்வில் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள் கிடைத்தன. இவற்றை மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவை, திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப் பன்றி, மயில் ஆகிய உயிரினங்களுக்கானவை என்பது அடையாளம் காணப்பட்டன.

காளை, எருமை, வெள்ளாடு போன்ற விலங்கினங்கள் அவர்களின் வேளாண்மைக்கு உறுதுணையாக இருந்துள்ளன என்று உணரப்படுகிறது. அதே நேரத்தில் கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் எலும்புத் துண்டு மாதிரிகளில் வெட்டுக் காய தழும்புகள் காணப்படுவதால், அவை உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக, சங்ககால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டதோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தது வெளிக்கொணரப்பட்டுள்ளது.கட்டுமானம்

கீழடி அகழாய்வில் கிடைத்த செங்கற்கள், சுண்ணாம்பு, சாந்து, கூரை ஓடுகள், சுடுமண் உறைகிணறு ஆகியவற்றின் மாதிரிகள், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. அந்தக் கட்டுமானங்களில் சிலிக்கா, மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் கலந்திருக்கின்றன. அந்த கலவை பற்றிய விரிவான அறிக்கை பெறப்பட்டது.

செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக 7 சதவீதம் சுண்ணாம்பு கலந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதோடு, சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பை பயன்படுத்தியுள்ளனர். இது, அக்கால மக்கள் மிகத்தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதை அறியச் செய்கிறது.

கீறல்கள்

4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்கள்தான் இந்தியாவில் கிடைக்கப்பெற்ற தொன்மையான வரிவடிவங்களாகும். சிந்துவெளி பண்பாடு மறைந்ததற்கும், தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரிவடிவம் இருந்தது. அதை கீறல்கள் மற்றும் குறியீடுகள் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

ஆனால் இவற்றை சாதாரண கீறல்களாக புறந்தள்ள முடியாது. ஏனென்றால், சிந்துவெளி வரிவடிவத்தைத் தொடர்ந்து, தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாக அவை இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவற்றை படித்தறிதல் முழுமை பெறவில்லை.

தமிழ் பிராமிக்கு முந்தைய வடிவங்களான இந்த குறியீடுகள், பெருங்கற்காலம், இரும்பு காலம் ஆகியவற்றில் வாழ்ந்த மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் எழுத்து வடிவங்களாகும். கீழடி அகழாய்வில் கிடைத்த கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள், இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

பிராமி எழுத்துகள்

குறியீடுகளுக்கு அடுத்ததாக கிடைக்கும் வரிவடிவம், தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும். இந்த எழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துகளில் குவிரன், ஆத(ன்) என்ற ஆட்களின் பெயர்களும், முழுமை பெறாத சில எழுத்துகளுடன் கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி எழுத்துகள், பானையின் கழுத்துப்பகுதியின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளன. பானை வனையும்போதோ, ஈர நிலையில் எழுதுவதோ அல்லது பானை உலர்ந்த பிறகு கூரிய பொருளைக் கொண்டு எழுதுவதோதான் மரபு. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில், உலர்ந்த பின்பு பொறிக்கப்பட்ட எழுத்துகள் போலவே காணப்படுகின்றன. இவற்றை பானையின் உரிமையாளர்கள் பொறித்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது உறுதி.

கைவினைத் தொழில்கள்

கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகளில் உள்ள கனிமங்களைக் கண்டறிவதற்காக இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. தண்ணீர் பிடித்து வைக்கவும், சமையலுக்கும் பானைகள், தனித்த வனைவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே செய்யப்பட்டது என்பது, உள்ளூர் மண் மாதிரியை வைத்து உறுதி செய்யப்பட்டது.

கீழடியில் பானை ஓடுகள் குவியல் குவியலாகக் கிடைப்பதால் அங்கு பானை வனையும் தொழில்கூடம் இருந்திருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. அங்கு கிடைத்த கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இப்படிப்பட்ட பானைகளைச் செய்வதில் சிவப்பு நிறத்துக்காக ஹேமடைட் என்ற இரும்பு தாதுப் பொருளையும், கருப்பு நிறத்துக்கு கரியையும் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

இப்படிப்பட்ட பானைகளை 1,100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சுட்டு உருவாக்கியுள்ளனர். இதற்கான தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். ரோம நாட்டு அரிட்டைன் பானை ஓடுகள் கிடைத்திருப்பதால், அந்த நாட்டு வணிகர்களும் இங்கு வந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.

நெசவு

கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்களி, துணிகளில் வரைவதற்கு பயன்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட வரைகோல், தறியில் தொங்கவிடப்படும் கருங்கல், சுடுமணலினால் செய்யப்பட்ட குண்டு, செம்பு ஊசி, சுடுமண் பாத்திரம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. இவை சாயத்தொழிலுக்கான சான்றுகளாகும். நெசவுத் தொழில் அங்கு சிறந்து விளங்கியதும் தெரிய வருகிறது.

மேலும், தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், கல் மணிகள், கண்ணாடி மணிகள், நேர்த்தியாக செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை, சங்ககால மக்கள் வளமையுடன் வாழ்ந்ததற்கு சான்றாக அமைந்துள்ளன.

பொழுதுபோக்கு விளையாட்டு

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆட்டக்காய்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுகின்றன. வட்டச்சில்லுகள் (பாண்டி மற்றும் நொண்டி விளையாட்டுகளில் பயன்படுபவை), தாயம் விளையாட்டுக்கான பகடைக்காய், வண்டி இழுக்கும் விளையாட்டுக்கான வண்டிச் சக்கரங்கள், சதுரங்கக் காய்கள் போன்றவை கிடைத்துள்ளன.

சுடுமண் உருவங்களான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், வளையல்கள், அணிகலங்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருள் கிடைத்திருந்தாலும், வழிபாடு தொடர்பான தொல்பொருள் எதுவும் தெளிவான முறையில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பல தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 2,184 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 2,184 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2,570 புதிய நர்சுகள் 3 நாட்களுக்குள் பணியில் சேருவார்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2,570 புதிய நர்சுகள் 3 நாட்களுக்குள் பணியில் சேருவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
3. 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் - வங்கிகள் நடவடிக்கை
2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.