பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை: தலைமைச் செயலாளர்- டிஜிபி மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு


பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை: தலைமைச் செயலாளர்- டிஜிபி மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2019 7:04 AM GMT (Updated: 21 Sep 2019 7:04 AM GMT)

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினர்.

காஞ்சிபுரம்

வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார். 2 நாட்கள் இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் தங்கி பேச்சு நடத்த உள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பாக சீன அதிகாரிகள் நேற்று  ஆய்வு செய்தனர். 

சீன வெளியுறவு, பாதுகாப்பு  மற்றும் சுற்றுலாத் துறையை சேர்ந்த 50 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழக போலீசாருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். சீன அதிபர் பார்வையிட உள்ள வெண்ணை உருண்டை கல், அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளனர். இக்குழுவினருடன் சீன அதிபரின் தலைமை பாதுகாவலர், தனி செயலாளர், மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் வந்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று  தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினர்.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகமும், டிஜிபி திரிபாதியும் இன்று காலை மாமல்லபுரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழக உளவுத்துறை அதிகாரிகள், டிஐஜி தேன்மொழி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் உடன் சென்றனர். அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அப்புறப்படுத்த அப்போது அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story