மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு + "||" + Impersonation Student in NEET Exam anticipatory bail petition filed in Madurai HighCourt

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு
நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து, மாணவர் உதித்சூர்யா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து உதித்சூர்யா மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. போலீஸ் விசாரணையில், உதித்சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது உறுதியானது.

இந்த புகார் எழுந்தவுடன் உதித்சூர்யா மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவரின் தந்தையிடம் விசாரணை நடத்த தேனி போலீசார் சென்னை வந்தனர். அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே மாணவர் உதித்சூர்யா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வில் 382 மதிப்பெண் பெற்று 6,704-வது இடத்தை பிடித்தேன்.

அதன் அடிப்படையில் எனக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்போது சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் தான் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.

இதற்கிடையே கடந்த 12-ந் தேதி மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினையில் மருத்துவ படிப்பை நிறுத்த முடிவு எடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தில் மனு கொடுத்தேன்.

ஆனால் தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக என் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தேனி கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் கைது செய்யப்பட்டால் என் எதிர்காலம் பாதிக்கும். இந்த வழக்கில் அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.