மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2019 8:29 PM GMT (Updated: 21 Sep 2019 8:29 PM GMT)

மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் இளம் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் க.பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக தமிழர் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிநாட்டிலும், தமிழகத்திலும் நடத்தப்படுகிறது. வருகிற 2021-ம் ஆண்டு உலக தமிழர் மாநாட்டை சிதம்பரத்தில் நடத்துவதற்கு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். தொல்லியல் துறையில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த முதல்- அமைச்சரிடம் பேசி உள்ளேன்.

உலக தரத்தில் அருங்காட்சியகம்

கீழடி அகழாய்வை உலகறிய செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக டெல்லி சென்று மனிதவள மேம்பாட்டு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கீழடியில் 11 தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்தகட்ட ஆய்வு நடத்தப்படும்.

கீழடிக்கு அருகில் உள்ள 4 கிராமங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டியது உள்ளது. இதற்காக நிதி ஒதுக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story