வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 9:34 PM GMT)

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. அதில் கடலோர மாவட்டங்கள் தொடங்கி, உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. கடந்த 18, 19-ந் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஓரிரு இடங்களில் கனமழை

குறிப்பாக திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘ஓமலூர், திண்டுக்கலில் தலா 6 செ.மீ., மேட்டூர் 4 செ.மீ., அதிராம்பட்டினம், முத்துப்பேட்டையில் தலா 3 செ.மீ., மணப்பாறை, திருவாரூர், லால்குடியில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.

Next Story