கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்


கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 10:03 PM GMT)

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் மாணவர் உதித்சூர்யா தேர்வு எழுதுவதற்கு மும்பைக்கு செல்லவில்லை. அத்துடன் கலந்தாய்வு மற்றும் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்றதாகவும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் 1½ மாதங்கள் கல்லூரியில் நடந்த வகுப்புகளில் அவர் பங்கேற்ற நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர். இதற்கிடையே தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கலந்தாய்வு-மாணவர் சேர்க்கை

அதாவது, ‘நீட்’ தேர்வுக்கு மாணவன் உதித்சூர்யா பெயரில் அவருடைய கல்விச்சான்றுகளை ஆள்மாறாட்ட நபரின் புகைப்படத்தை வைத்து விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, ஆள்மாறாட்ட நபரின் புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் கிடைத்துள்ளது. அதை வைத்து அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து கலந்தாய்வுக்கு உதித்சூர்யா அழைக்கப்பட்டார். கலந்தாய்வில் ஹால்டிக்கெட் மற்றும் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். இதனால், உதித்சூர்யாவுக்கு பதில் ஆள்மாறாட்ட நபரே கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

கலந்தாய்வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளார். அதன்படி தேனியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்ட நபரே கலந்துகொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது உதித்சூர்யாவும், அவருடைய தந்தை வெங்கடேசனும் உடன் வந்ததாக கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கும் நாளில் உதித்சூர்யா யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், வகுப்பில் பங்கேற்றுள்ளார்.

மும்பை செல்லவில்லை

மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளது. அப்போது, ஆள் மாறாட்ட நபர் தனது 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்களை கொடுத்துள்ளார். அவை, கல்லூரி அலுவலக அறையில் மாணவனின் சான்றிதழோடு வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மாணவர் உதித்சூர்யா மும்பையில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியதாக கூறிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், ‘நீட்’ தேர்வு நடந்த நாளில் அவர் மும்பைக்கு செல்லவில்லை என்றும், அன்றைய தினம் அவர் சென்னையில் தான் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் அடிக்கடி மும்பை சென்று வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

அதிகாரிகளுக்கு தொடர்பு

ஒருபுறம் பூதாகரமாக தகவல்கள் வெளியாகும் நிலையில், மற்றொரு புறம் பல்வேறு கேள்விகளும் எழுகிறது. அதாவது, சில ஆண்டுகளாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் மாணவ, மாணவிகள் புகைப்படம் இடம்பெறுகிறது.

அப்படி இருக்கையில், கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் போது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழில் உள்ள புகைப்படத்திலும், கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்றவரின் உருவத்திலும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்காமல் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கலந்தாய்வு நடத்திய அதிகாரிகளுக்கும், இந்த ஆள்மாறாட்டத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மும்பையில் உதித்சூர்யா பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி மையம் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

ஆள்மாறாட்ட நபர் பற்றி தகவல் தெரிவிக்க போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

ஆ ள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதிய நபர் பற்றி தகவல் தெரிவிக்க போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

மாணவரை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சென்னையில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோர் மட்டுமின்றி அவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் தலைமறைவாக உள்ள விவரம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளன. தனிப்படை போலீசாரிடம் உதித்சூர்யா சிக்கினாலோ அல்லது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர் சிக்கினாலோ தான் இந்த சம்பவம் எப்படி நடந்தது?. யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என்ற விவரங்கள் தெரியவரும்.

முன்ஜாமீன்

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மாணவர் உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில், அரசு வக்கீல் மூலமாக ஆட்சேபனை தெரிவிக்கப்படும். இதற்காக ஒரு இன்ஸ்பெக்டர் மதுரை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான ஆவணங்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கேட்டு பெறப்பட்டுள்ளது. அவையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தகவல் தெரிவிக்கலாம்

அத்துடன் இந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பிய அசோக் கிருஷ்ணன் என்பவர் யார்? எங்கிருந்து அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபரின் புகைப்படத்தை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம் அல்லது பயிற்சி மையம் நடத்துபவராக இருக்கலாம். ஏனெனில் நன்கு பயிற்சி பெற்றவர்களால் தான் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

அவருடைய புகைப்படத்தை வைத்து தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் படித்து வருபவர்களின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாணவரின் புகைப்படத்துடனும் அது பொருந்தவில்லை. எனவே அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 9498101570 என்ற செல்போன் எண்ணில் அல்லது sbofficethenidist@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப் பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story