தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் - விஜய பிரபாகரன் பேட்டி


தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் - விஜய பிரபாகரன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2019 9:13 AM GMT (Updated: 22 Sep 2019 9:52 AM GMT)

தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது அக்டோபர் 1 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்பு மனு, திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சுப்பிரமணியன் மற்றும் நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீசும் அறிவித்துள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் எனவும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவரது சொந்த கருத்து.  அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் சர்ச்சையானது, தனியார் பேனர் விழுந்திருந்தால் சர்ச்சை ஆகியிருக்காது. தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே விக்கிரவாண்டி அருகில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் ஒருவேளை தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவு செய்தால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுமா? என கேள்வி எழுந்துள்ளது.

Next Story