தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 AM GMT (Updated: 22 Sep 2019 10:45 AM GMT)

தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பழமொழியை நிரூபித்துக்காட்டியுள்ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கும் பழைமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்து, 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருப்பதாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்றார்.

Next Story