முகநூலில் காதலித்தவரை நேரில் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று கூறிய மாணவி, முகநூலில் காதல் - நேரில் மோதல்


முகநூலில் காதலித்தவரை நேரில் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று கூறிய மாணவி, முகநூலில் காதல் - நேரில் மோதல்
x
தினத்தந்தி 23 Sep 2019 9:00 PM GMT (Updated: 23 Sep 2019 8:12 PM GMT)

முகநூலில் காதலித்தவரை நேரில் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று கூறி மாணவி ஒருவர் மறுத்ததால் அவரிடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

கோவை,

கோவையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி அருகில் நேற்றுக்காலை 8.15 மணியளவில் பரப்பாக காணப்பட்டது. ஒரு கல்லூரி மாணவியை வாலிபர் இழுப்பதும் அவரை தள்ளி விட்டு மாணவி கல்லூரிக்குள் செல்வதும், உடனே அந்த வாலிபர் விடாமல் மாணவியிடம் வாக்குவாதம் செய்வதுமாக இருந்தது. இதை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து விட்டு என்ன? என்று அந்த வாலிபரிடம் கேட்டனர். அதற்கு அந்த வாலிபர் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி விட்டு மாணவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை தாக்கினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும், கோவையில் படிக்கும் கல்லூரி மாணவியுடன் முகநூல் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. மிகவும் ஆடம்பரமான உடையில் தன்னை புகைப்படம் எடுத்து அந்த வாலிபர் முகநூலில் மாணவிக்கு அனுப்பியுள்ளார். அதில் தன்னை மிகவும் அழகாகவும் காண்பித்துள்ளார். இதைப்பார்த்த அந்த மாணவி வாலிபரின் காதல் வலையில் விழுந்ததாக தெரிகிறது.

மாணவியை நேரில் பார்த்து தனது காதலை தெரிவிக்க விரும்பிய அந்த வாலிபர் கோவை வந்தார். பின்னர் நேற்று காலை அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த மாணவியை பார்த்து தனது காதலை வெளிப்படுத்தினார்.

அந்த வாலிபரை நேரில் பார்த்ததும் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். நான் உங்களை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார். முகநூலில் பார்த்த முகம் வேறு. நேரில் பார்க்கும் முகம் வேறு என்று கூறி மாணவியும் அந்த வாலிபருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாணவியிடம் தகராறு செய்தார். இதைப்பார்த்து தான் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். மேற்கண்ட விவரம் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பின்னர் அந்த வாலிபரிடம், பிடிக்காத மாணவியை இனி தொந்தரவு செய்யக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். மாணவிக்கும் அறிவுரை கூறினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

Next Story