அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுனர் இறந்திருப்பது வேதனைக்குரியது - மு.க.ஸ்டாலின் கண்டனம்


அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுனர் இறந்திருப்பது வேதனைக்குரியது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:45 PM GMT (Updated: 23 Sep 2019 9:34 PM GMT)

அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுனர் இறந்திருப்பது வேதனைக்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். குறிப்பாக, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்ற காரணத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போதும், அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். அப்போதெல்லாம் பதிலளித்த, மின்துறை அமைச்சர், பல விளக்கங்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, 2,657 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக இந்தத் திட்டத்திற்கு, மின் கம்பிகள் அனைத்தையும் புதைவடக் கம்பிகளாக மாற்ற இருக்கிறோம் என்று உறுதி சொல்லப்பட்டது.

தொடர்ந்து 7 முறை சட்டமன்றத்தில் இதுகுறித்து நினைவுபடுத்திப் பேசியிருக்கிறேன். அதன்விளைவாக, சில பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பணிகள் போகின்ற போக்கைப் பார்த்தால், 2021 மார்ச் மாதம்தான் முடிவடையும் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாகவும், விரைவாக இந்த பணிகளை முடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிற நிலையில், கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது ஒரு நாள் பெய்த மழையில் கூட சென்னை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘ஏற்கனவே, முதல்-அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை சுற்றுலாப் பயணமாக சென்று வந்திருக்கிறார்கள். நீர் நிலையைப் பற்றி விவாதிப்பதற்கும், அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் முதல்-அமைச்சர் வெளிநாடு செல்லவிருப்பதாக செய்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து வந்து விட்டு, அந்தப் பணிகளையெல்லாம் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

சேலத்தில் ஓட்டுனர் ஒருவர் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பந்தமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுனர் மணி இறந்திருப்பது வேதனைக்குரியது. இறந்தவரின் குடும்பத்திற்கு, ஆட்சியாளர்கள் உரிய இழப்பீடும், நியாயமும் வழங்கிட வேண்டும். அமைச்சர்கள் சுயவிளம்பரத்திற்கான இத்தகைய போக்குகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story