37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை


37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை
x
தினத்தந்தி 24 Sep 2019 4:25 AM GMT (Updated: 2019-09-24T09:55:10+05:30)

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் பழமை வாய்ந்த அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர் ஆகிய சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் திருட்டு போனது.

தமிழகத்தில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர விசாரணை நடத்தி, இக்கோவிலுக்குரிய நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். அவரது தலைமையிலான குழுவினரின் தொடர் நடவடிக்கை, கடும் போராட்டத்துக்கு பின்பு அந்த சிலையை மீட்டனர். சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய தூதரகத்தின் மூலமாக ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இந்த நடராஜர் சிலை நேற்று சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் நுழைவாயில், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய பகுதிகளில் 4 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும், கூடுதலாக புதிய இரும்பு கதவுகளும், அவசர ஒலி கருவிகளும் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு  நடராஜர் சிலை மீண்டும் கொண்டுவரப்பட்டு போலீசாரல், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவிலில் ஓப்படைக்கப்பட்டது.
நடராஜர் சிலை மீண்டும் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து பக்தர்கள் உற்சாகத்துடன் வழிபாடு செய்தனர். மேலும் 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலைக்கு கோவிலில் 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


Next Story