மாநில செய்திகள்

கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது! + "||" + DMK donated ₹40 cr. to parties for Lok Sabha polls

கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!

கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,  முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  போட்டியிட்டன.

தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தலா 2 இடங்களும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அப்போது திமுக தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்  மற்றும்  கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சிக்கு தலா ரூ.15 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும்  நன்கொடையாக வழங்கி உள்ளது.

இந்த தகவல் தேர்தல் ஆணையம் முன் திமுக பதிவு செய்த தேர்தல் செலவு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிய வந்து உள்ளதாக  ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:-

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தல் செலவினங்களுக்காக திமுகவிடம் நன்கொடைகளைப் பெற்றது பெரிய விஷயமில்லை எனவும் இது சாதாரணமானது என்றும் கூறி உள்ளது.

ஆகஸ்ட் 27 அன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, திமுக ரூ.79.26 கோடி செலவு கணக்கு  காட்டியது. அதில் ரூ.40 கோடி மூன்று  கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி இருப்பதாவது:-

"நாங்கள் மாநிலம் முழுவதும் பணம் வசூலித்து உள்ளோம். அந்தத் தொகையை தேர்தலுக்காக செலவிட்டோம். அதற்கான செலவு கணக்கை  தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எல்லாம் வெளிப்படையான முறையில் செய்யப்பட்டது என கூறி உள்ளார்.

சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறும்போது, தேர்தல் நிதி வாங்குவது வழக்கமானது. அதில் தவறில்லை "எங்களுக்கு கிடைத்தது மோசடி பணம் அல்ல. கூட்டணிக் கட்சிகள் தேர்தலின்போது ஒருவருக்கொருவர் உதவும் என கூறி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் சிபிஐ (எம்) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் திமுக வழங்கிய தொகை குறித்து எந்தக் குறிப்பும் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியபோது, பாலகிருஷ்ணன், மாநில பிரிவு அனைத்து விவரங்களையும் கட்சியின் மத்திய குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அது அடுத்த பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படும் என்றார்.

சிபிஐ (எம்) தனது பிரமாண பத்திரத்தில் நாடு முழுவதும் செலவினம் சுமார்  ரூ.7.2 கோடி என்று கூறி உள்ளது. "பிரமாணப் பத்திரங்கள் ஒவ்வொரு தொகுப்பாக தாக்கல் செய்யப்படும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பரிவர்த்தனையும் வங்கி மூலம் செய்யப்படுகிறது, எதுவும் மறைக்கப்படவில்லை” என பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தனது கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய நிதியை வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்தார்.

திமுக தலைவரும் நட்சத்திர பிரச்சாரகருமான மு.க .ஸ்டாலினுக்கு ரூ.58,93,994 செலவிட்டு உள்ளது. இந்த தொகை பெரும்பாலும் பிரச்சாரத்தின் போது விமான பயணத்திற்காக இருந்தது. ஊடகங்கள் மூலம் பிரச்சார செலவுகள் ரூ.15,46,14,693 ஆகும்.

திமுக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் செலவிட்டதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாக அந்த ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.