நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 3:10 PM GMT (Updated: 2019-09-24T20:40:17+05:30)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என துணை முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை,

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன.

இடைத்தேர்த்லுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வருகிற 30ந்தேதியுடன் முடிவடைகிறது.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றும், இன்றும் விருப்ப மனுக்களை பெற்றனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார்.

இது போல் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

இதனிடையே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.  இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Next Story