2019 பாராளுமன்ற தேர்தல் செலவு : திமுக 90% அதிகம், அதிமுக 38% குறைவு


2019 பாராளுமன்ற தேர்தல் செலவு : திமுக 90% அதிகம், அதிமுக 38% குறைவு
x
தினத்தந்தி 25 Sep 2019 10:48 AM GMT (Updated: 2019-09-25T16:18:22+05:30)

2019 பாராளுமன்ற தேர்தலில் திமுக 90 சதவீதம் அதிகமாகவும் அதிமுக 38 சதவீதம் குறைவாகவும் செலவு செய்து உள்ளன.

சென்னை

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள் கோடிகணக்கில்  பணத்தை வாரி இறைத்து உள்ளன. திமுக 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட  2019 தேர்தலில் 90 சதவீதம் அதிகம் செலவு செய்து உள்ளது. அதிமுக 38 சதவீதம் குறைவாகவும் செலவு செய்து உள்ளது. கடந்த 2019 தேர்தலில்  திமுக 38 இடங்களிலும் அதிமுக ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்  சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் ரூ.79.76 கோடி செலவு செய்து உள்ளதாக கூறி உள்ளது. கடந்த 2014 தேர்தலில் ரூ.41.51 கோடி செலவு செய்து இருந்தது.

இந்த தேர்தலில்  திமுக ரூ. 40 கோடி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்,  கொங்கு நாடு தேசிய கட்சிக்கும் நிதியாக வழங்கி உள்ளது.

அதிகபட்சமாக திமுக மீடியா விளம்பரங்களுக்கு மட்டும்  ரூ15.41 கோடி செலவு செய்து உள்ளது. ஆனால் கடந்த 2014 தேர்தலில் ரூ.4. 28 கோடி மட்டுமே செலவு செய்தது. ஆனால் ரூ.17.56 கோடி போஸ்டர்  பேனர் மட்டும் சுவர் விளம்பரங்களுக்கு செலவு செய்து இருந்தது. இந்த முறை திமுக டிவி மற்றும் பிரிண்ட் மீடியாவை சார்ந்து இருந்து உள்ளது.

அதிமுக 2019 தேர்தலுக்காக மொத்தம் ரூ.19.95 கோடி செலவைக் காட்டியுள்ளது. இதில், அச்சு மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரத்திற்காக ரூ.19.11 கோடி செலவிடப்பட்டு உள்ளது. 2014 தேர்தலில் அதிமுக மொத்தம் ரூ.32.19 கோடி செலவு செய்ததாக கூறி உள்ளது. இதில் ரூ.14.97 கோடி ரூபாய் மீடியா  விளம்பரங்களுக்கு மட்டும் செலவு செய்து உள்ளது.

Next Story