நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது எத்தனை பேர்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது எத்தனை பேர்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:51 PM GMT (Updated: 25 Sep 2019 11:51 PM GMT)

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களிடம் அரசு ஒப்படைத்து விட்டது.

எனவே இந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியானவர்களை நிரப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது?. அதேபோல அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை பேருக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது?. அதன் விவரங்களை மதிப்பெண் பட்டியலுடன் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாக மருத்துவப்படிப்பில் சேர முறைகேடு நடைபெறுவது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்து இதுவரை எத்தனை மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்?.

நீட் தேர்வில் கடும்சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஆள்மாறாட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?. நீட் தேர்வு அடையாள அட்டையும், கல்லூரி அடையாள அட்டையும் முறையாக சோதிக்கப்பட்டதா?.

உதித்சூர்யா விவகாரத்தில் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?. நீட் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அதிகாரிகள் கடைபிடித்தார்களா?.

இரட்டை வசிப்பிட சான்றிதழ் பெற்று மருத்துவக்கல்லூரிகளில் மோசடியாக சேர்க்கை பெற்றது போல வேறு எதுவும் முறைகேடுகள் தமிழகத்தில் நடந்துள்ளதா?. தேனி சம்பவம் போல ஆள்மாறாட்டம் தொடர்பான வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதா?. இந்த கேள்விகளுக்கு விரிவான பதிலை தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Next Story