திருவள்ளூர் அருகே மர்ம பொருள் வெடித்ததில் சாமியார் பலியானார்; சிஷ்யை உயிர் தப்பினார்


திருவள்ளூர் அருகே மர்ம பொருள் வெடித்ததில் சாமியார் பலியானார்; சிஷ்யை உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:03 AM GMT (Updated: 2019-09-26T15:33:11+05:30)

திருவள்ளூர் அருகே மர்ம பொருள் வெடித்ததில் சாமியார் ஒருவர் பலியானார். அவருடன் தங்கியிருந்த சிஷ்யை காயமின்றி உயிர் தப்பினார்.

திருவள்ளூர்

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சித்த வைத்தியம், ஜோதிடம், யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பான பூஜைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். 

திருமணம் செய்து கொள்ளாத இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு  திருவள்ளூர் அருகே உள்ள இரையாமங்கலம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் கட்டி சாமியார் போல் வாழ்ந்து வந்துள்ளார். இங்கு  சென்னையைச் சேர்ந்த அவரது சிஷ்யை லாவண்யா என்ற நடுத்தர வயதுடைய பெண் சில நாட்களுக்கு முன் வந்து தங்கியிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கோவிந்தராஜ் மாலையில் பூஜையில் ஈடுபட்டபோது திடீரென வெடிச்சதம் கேட்டது. உடனே பக்கத்து அறையில் இருந்த சிஷ்யை ஓடி வந்து பார்த்த போது கோவிந்தராஜ் ரத்தம் சொட்டிய நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து  மப்பேடு போலீசார் வந்து பார்த்தபோது கோவிந்தராஜ் இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தராஜ் தான் தங்கியிருக்கும் வீட்டின் பத்திரத்தை சில தினங்களுக்கு முன்பு தாயிடம் கொடுத்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம்  சொத்து பிரச்சினையா? அல்லது வேறுகாரணமா ? என உயிர் தப்பிய  லாவண்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து போலீஸ் தடய அறிவியல் பிரிவு டிஎஸ்பி நளினா தலைமையில் சென்ற நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது மின்சாதன பொருட்களையும், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன பொருட்களையும் பூஜை பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். ரசாயன பரிசோதனை முடிவுக்கு பிறகே வெடிபொருள் பற்றியும் அது வெடித்தது பற்றியும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story