பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகும்படி அ.தி.மு.க. பிரமுகருக்கு நோட்டீஸ் வீட்டின் கதவில் போலீசார் ஒட்டினர்


பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகும்படி அ.தி.மு.க. பிரமுகருக்கு நோட்டீஸ் வீட்டின் கதவில் போலீசார் ஒட்டினர்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் கதவில் போலீசார் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 12-ந் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சென்றபோது, சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்புக்காக வைத்து இருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மனோஜை கைது செய்து, அவரை முதல் குற்றவாளியாகவும், 2-வது குற்றவாளியாக அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலையும் சேர்த்தனர்.

நோட்டீஸ்

மேலும் ஜெயகோபால், அவருடைய மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தல் என்ற மற்றொரு பிரிவின் கீழும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

போலீசார் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடியும் அவரை காணவில்லை. ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை பூட்டிவிட்டு தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெயகோபால் வீட்டின் கதவில் பள்ளிக்கரணை போலீசார் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மேலும் அவரது உறவினர்கள் சிலரையும் பிடித்து ஜெயகோபால் எங்கு உள்ளார்? என்று விசாரித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் இருவரையும் பிடித்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ஒழுங்கு நடவடிக்கை

இதற்கிடையில் பேனர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மீது தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

Next Story