தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 PM GMT (Updated: 2019-09-27T01:03:43+05:30)

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அதிரடியாக தேர்தல் அட்டவணையையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அதன்படி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

நவம்பரில் உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது. தேர்தல் பயன்பாட்டுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புப்படி தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தேர்தல் நடத்த 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகளும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுபோடும் எந்திரம் (பேலட் யூனிட்) கருவிகள் தற்போது கைவசம் உள்ளன.

50 ஆயிரம் எந்திரங்கள்

மீதம் உள்ள சுமார் 50 ஆயிரம் மின்னணு எந்திரங்களை கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடையும். அதற்கு பிறகு அக்டோபர் 15-ந்தேதி வரை வெளிமாநில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர் தேர்தல் தேதி குறித்து அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முறையாக அரசு அறிவித்த உடன் தேர்தல் நடத்தப்படும்.

அக்டோபர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, நவம்பரில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரவழைக்கப்பட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாகவா? அல்லது 2 கட்டமாக நடத்தப்படுமா? என்பது குறித்து பணிகள் நிறைவடைந்த உடன் தான் முடிவு செய்யப்படும். இருந்தாலும், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால் 2 அல்லது 3 கட்டங்களாக நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வாக்குச்சீட்டு முறை

தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்படுவது தொடர்பாக பூர்வாங்கபணிகள் சிறப்பு அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது. ஆனால் கலெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே இந்த 4 புதிய மாவட்டங்களுக்கு என்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு என்று தனியாக தேர்தல் தற்போது நடத்தப்படாது. ஏற்கனவே இருக்கும் பழைய மாவட்டங்களின் முறைப்படி தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story