கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது


கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2019 8:16 PM GMT (Updated: 26 Sep 2019 8:32 PM GMT)

மார்த்தாண்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

மார்த்தாண்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

5 பேர் சிக்கினர்

மார்த்தாண்டம் காந்தி மைதானத்துக்கு நேற்று காலை 7 மணிக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் அங்கு நின்ற ஒரு காரை வாடகைக்கு அழைத்தனர். குலசேகரம் அருகே திருவரம்பு பகுதிக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது வாடகை பணமாக ரூ.500 கொடுத்தனர். அந்த பணம் வழக்கமாக புழக்கத்தில் உள்ள பணத்தை விட மாறுபட்டு இருந்ததை காரின் டிரைவர் கண்டுபிடித்தார்.

இதுபற்றி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கார் டிரைவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனர். அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. மேலும் காரை வாடகைக்கு அழைத்து சென்ற 5 பேர் அந்த பகுதியில் நின்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் கோட்டூர் சவுதாமூட்டை சேர்ந்த சாவுத் (வயது 24), மாங்கோடு அம்பலக்கடையை சேர்ந்த மணி (51), மணவாளக்குறிச்சியை சேர்ந்த சிபு என்ற சாமி (45), திருவரம்பு தெங்குவிளையை சேர்ந்த ஜேக்கப் (46), மணலிக்கரை காஞ்சான்காடு ஜெஸ்டின் ஜெயசேகர் (39) என்பது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

போலீசாரிடம் சிக்கிய 5 பேரும், அம்பலக்கடையில் உள்ள மணி வீட்டில் தனியாக ஒரு அறையில் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர். அப்படி தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை சாவுத் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை சிபு, ஜேக்கப், ஜெஸ்டின் ஜெயசேகர் ஆகியோர் குமரி மாவட்டம் முழுவதும், கேரளாவிலும் புழக்கத்தில் விடும் வேலையை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து சாவுத் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சாவுத் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.77 ஆயிரம் ஆகும். மேலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story