கார், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை குறைக்க “அரசு பஸ்களில் இலவச சேவையை அறிமுகப்படுத்தலாம்” அன்புமணி ராமதாஸ் யோசனை


கார், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை குறைக்க “அரசு பஸ்களில் இலவச சேவையை அறிமுகப்படுத்தலாம்” அன்புமணி ராமதாஸ் யோசனை
x
தினத்தந்தி 26 Sep 2019 9:30 PM GMT (Updated: 2019-09-27T01:56:15+05:30)

அரசு பஸ்களில் இலவச சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் கார், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

புவி வெப்பமடைதலால் ஏற்படும் பேராபத்தை தடுக்கும் வகையில் காலநிலை அவசரநிலையை (கிளைமேட் எமர்ஜென்சி) அறிவிக்க வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் நேற்று விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். கல்லூரி முதல்வர்கள் ஜி.சங்கரி, சி.சேதுக்கரசி, செயலாளர் கே.எஸ்.லட்சுமி, மீனாட்சி சுந்தரராஜன் என்ஜினீயரிங் கல்லூரி செயலாளர் கே.எஸ்.பாபாய், அரிமா சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

அன்புமணி ராமதாஸ் பேச்சு

புவி வெப்பமடைதல் பிரச்சினை உலகில் பேராபத்தை விளைவிக்க போகிறது. கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் புவியின் வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. எரிபொருளில் இருந்து வெளியாகும் கரியமில வாயுதான் புவி வெப்பமடைய முக்கிய காரணமாகும். இந்த பேராபத்தை தடுக்க கரியமில வாயு அடர்த்தியை குறைக்கவேண்டும். நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் பயன்பாட்டை அதிகமாக்க கூடாது. எரிபொருள் பயன்பாடு மிகவேகமாக குறைக்கப்பட வேண்டும்.

வல்லுனர்கள் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி 2050-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் 7½ மீட்டர் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அப்படி என்றால் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் அழிந்தே போய்விடும். கோடம்பாக்கம் கடற்கரையாக மாறிவிடும்.

பொது போக்குவரத்து தேவை

இந்த அபாயம் தடுக்கப்பட வேண்டும் என்றால் மத்திய அரசு உடனடியாக காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (கிளைமேட் எமர்ஜென்சி) அமல்படுத்த வேண்டும். அயர்லாந்து, இங்கிலாந்து. பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளிலும், பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இந்த காலநிலை அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த நடவடிக்கை அமலாக வேண்டும். தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் இது அறிவிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் பயன்பாடு குறைந்து பொதுபோக்குவரத்து அறிவிக்கப்பட வேண்டும். சென்னையில் தற்போது தினமும் 3 ஆயிரத்து 500 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை 8 ஆயிரம் பஸ்களாக உயர்த்தப்பட வேண்டும். அனைத்து பஸ்களிலும் இலவச சேவை அறிவிக்கப்பட வேண்டும். அப்போது தான் மோட்டார் சைக்கிள்கள், கார்களின் பயன்பாடு குறையும். கரியமில வாயுவின் அடர்த்தியை வெகுவாக கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் பயன்பாடு குறைப்பு தான் எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ சமுதாயமே தூதுவர்கள்

இதற்கு மாணவ சமுதாயத்தின் கடமை பெரியளவில் இருக்கிறது. நீங்கள் தான் இந்த விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் தூதுவர்கள். நீங்கள் தான் அரசுக்கு அழுத்தம் தந்து இதை சாத்தியமாக்க வேண்டும். குழுக்களாக சேர்ந்துகொண்டு காலநிலை அவசரநிலை பிரசாரத்தில் மாணவ சமுதாயம் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவ சமுதாயம் அறவழியில் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றதை நாடு மறக்காது. அதன்படி எதிர்கால பிரச்சினைக்கு தீர்வுகாண இன்றே மாணவ சமுதாயம் விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story