சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாட்டம் -அமைச்சர்கள் மரியாதை


சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாட்டம் -அமைச்சர்கள் மரியாதை
x
தினத்தந்தி 27 Sep 2019 5:15 AM GMT (Updated: 2019-09-27T10:45:20+05:30)

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு எழும்பூரில் 5 சாலைகள் சந்திப்பில், சி.பா.ஆதித்தனாரின் சிலையை திறந்து வைத்தார். அந்த சாலைக்கு ‘சி.பா.ஆதித்தனார் சாலை’ என்றும் எம்.ஜி.ஆர். பெயரிட்டார்.

இதற்கிடையே, சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி  சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எழும்பூரில் உள்ள சி.பி.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்  மரியாதை செலுத்தினர்.

Next Story