தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில்களுக்கும் உதவிகளை செய்கிறது -முதல்வர் பழனிசாமி


தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில்களுக்கும் உதவிகளை செய்கிறது -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 Sep 2019 7:19 AM GMT (Updated: 28 Sep 2019 11:12 AM GMT)

தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில் முன்னேற்றத்துக்கும் அனைத்து உதவிகளையும் செய்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஏற்கனவே வாங்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நீண்டகாலமாக தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்க்கவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகக் கூறிய அவர், சரியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும், முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகண்டு வருகிறோம் என்றார்.

 தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. திட்டங்கள் குறித்து முழுமையாக தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில் முன்னேற்றத்துக்கும் அனைத்து உதவிகளையும் செய்கிறது. முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் 28,777 பெண்கள் பயனடைந்துள்ளனர் எனறும் கூறினார்.

Next Story