நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 4 மாணவர்கள் கைது; 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார்


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்:  4 மாணவர்கள் கைது; 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 29 Sep 2019 3:29 AM GMT (Updated: 29 Sep 2019 3:29 AM GMT)

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 பேராசிரியர்கள் மீது புகார் போலீசில் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனுடன் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்களிடம் சி.பி. சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் சில மாணவர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மணவர் பிரவீண், பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல், சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி ஆகியோர் நேற்றுமுன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள்.

சென்னையில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய தங்கள் தந்தைதான் காரணம் என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், மாணவி அபிராமி, அவருடைய தந்தை மாதவன் ஆகிய 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் மாதவன் தவிர மற்ற 5 பேரையும் நேற்று தேனிக்கு கொண்டு சென்றனர். (உடல்நலக்குறைவின் காரணமாக மாதவன் சென்னையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அபிராமிக்கு துணையாக அவரது தாயார் சென்று உள்ளார்.)

அங்கு நடைபெற்ற விசாரணையின் போது, அவர்கள் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.

இதற்கிடையே, தேனி மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் வருகை பதிவேட்டில் உதித்சூர்யா வகுப்பில் பங்கேற்றது தொடர்பான விவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, வருகை பதிவேட்டில் கடந்த 12-ந் தேதி மாணவர் உதித்சூர்யா வகுப்பில் பங்கேற்றதாக ஆங்கிலத்தில் ‘பிரசன்ட்’ என்று குறிப்பிடும் வகையில் ‘பி’ என்ற எழுத்தை குறிப்பிட்டுவிட்டு, பின்னர் வரவில்லை என்பதை ஆங்கிலத்தில் ‘ஆப்சென்ட்’ என்று குறிப்பிடும் வகையில் ‘ஏ’ என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தரப்பில் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில், மாணவரின் வருகை பதிவேட்டில் உதவி பேராசிரியர்கள் 2 பேர் திருத்தம் செய்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

அப்போது அங்கு இருந்த போலீஸ் அதிகாரி, இது நிர்வாக ரீதியான பிரச்சினை என்பதால், அதற்கு துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வருகை பதிவேட்டில் திருத்தம் செய்தது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. உடற்கூறியல் (அனாடமி), உடலியல் (பிஸியாலஜி) மற்றும் உயிர்வேதியியல் (பயோகெமிஸ்ட்ரி) ஆகிய 3 துறைகளில் உள்ள வருகை பதிவேட்டில் உதித்சூர்யா 13-ந் தேதி வரையிலும் வகுப்புகளுக்கு வந்திருப்பதாக இருக்கிறது. சமூக மற்றும் தடுப்பு மருந்துகள் துறையில் (சோசியல் மற்றும் பிரிவென்டிவ் மெடிசின்) 12-ந் தேதியன்று உதித்சூர்யா வந்திருப்பதாக குறிப்பிட்டு, பின்னர் வரவில்லை என்ற குறியீடு இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த துறையின் தலைவர், 27-ந் தேதியன்றுதான் தனக்கு இந்த விவரம் தெரியும் என்று கூறி இருக்கிறார். உதவி பேராசிரியர் ஒருவர் கூறியதன் பேரில், மற்றொரு உதவி பேராசிரியர் திருத்தம் செய்ததாக தெரியவந்து உள்ளது. இதனால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

இந்தநிலையில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் முகமது இர்பான் என்ற மாணவர் ‘நீட்’ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் மாணவர் உதித்சூர்யா சிக்கியதை தொடர்ந்து அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள், ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்களை மாணவ-மாணவிகள் முன்னிலையில் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தும்படி மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.

இதன்படி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள், ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்த்தோம். மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்த ஆண்டு கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 100 மாணவ-மாணவிகளில் 99 பேர் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு கடந்த 20-ந்தேதி நேரில் ஆஜரானார்கள். ஆனால் வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் முகமது இர்பான் மட்டும் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தினோம். அப்போது, கல்லூரி விடுதியில் தங்கி படித்த முகமது இர்பான் கடந்த 7-ந் தேதி வரை வகுப்புக்கு சென்றதும், பின்னர் உடல்நல பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று விடுதியில் உடன் தங்கியிருந்தவர்களிடம் கூறிவிட்டு 8-ந் தேதி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது. அதன் பிறகு அவர் மீண்டும் கல்லூரிக்கு வரவில்லை.

இந்தநிலையில் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கும், விசாரணைக்கும் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு பதிவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற திங்கட்கிழமை (நாளை) அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் முகமது இர்பானின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்களை அவருடைய முன்னிலையில் நேரடியாக ஆய்வு செய்தால் அவர் ‘நீட்’ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டாரா? இல்லையா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் தெரியவரும்.  இவ்வாறு துணை முதல்வர் முருகன் கூறினார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட்டின் நேரடி மேற்பார்வையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? என்பது குறித்து விஞ்ஞான ரீதியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிகவும் நுட்பமான முறையில் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் நடந்த முறைகேடு மிகப்பெரிய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து நடைபெற்று உள்ளது. இந்தியா முழுவதும் இந்த ‘நெட்வொர்க்’ மூலம் நீட் தேர்வில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கருதுகிறோம். விசாரணையை தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள், அதிர்ச்சியூட்டும் வகையில் வருகின்றன.

தற்போது வரை தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரியில் படித்த பிரவீண், அவருடைய தந்தை சரவணன், பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்த ராகுல், அவரது தந்தை டேவிஸ், திருப்போரூரில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் படித்த அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது கைதாகி உள்ள 3 மாணவர்களும், மாணவியும் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரே பள்ளியில்தான் படித்து உள்ளனர். நீட் தேர்வுக்கும் ஒன்றாக பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இருக்கிறார்கள். இவர்களது பெற்றோர்களும் குடும்ப ரீதியாக நண்பர்கள் ஆவார்கள். இதனால் இவர்கள் அனைவரும் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாதவன் தொழில் அதிபர் ஆவார். டேவிஸ் காண்டிராக்டர். சரவணன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் இவர்களுடைய ஒரே ஆசை. அதற்காக பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் கோடிக்கணக்கான பணத்தை விலையாக கொடுத்து உள்ளனர்.

குறைந்த மதிப்பெண்களை பெற்ற தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும் என்ற பேராசையில், இந்த மோசடியில் ஈடுபட்டு பணத்தையும் இழந்து இன்று சிறை கம்பிகளை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

விசாரணையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து இருக்கிறது. ஆதாரங்கள் அடிப்படையில் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவார்கள்.

ஆள்மாறாட்டத்தின் மூலம் மட்டும்தான் இந்த முறைகேடு நடந்ததாக சொல்ல முடியாது. நீட் தேர்வில் மதிப்பெண்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டதும் தற்போது தெரியவந்து உள்ளது.

எங்களுடைய புலனாய்வுப்படி கைது செய்தோம். வழக்கு போட்டோம் என்று இல்லாமல், நீட் தேர்வில் இனிமேல் முறைகேடுகளே நடக்க கூடாது என்ற அடிப்படையிலும், அப்பாவி மாணவர்களும், பெற்றோர்களும் இந்த மோகத்தில் விழ கூடாது என்பதன் அடிப்படையிலும் எங்கள் விசாரணை பரந்து விரிந்து செல்கிறது.  இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Next Story