ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நிறைவு முடிவு வெளியானதும் - நேர்முக தேர்வு


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நிறைவு முடிவு வெளியானதும் - நேர்முக தேர்வு
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 9:09 PM GMT)

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நிறைவு பெற்றது. இந்த தேர்வு முடிவு வெளியானவுடன் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட 26 உயரிய பதவிகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நிரப்பிவருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என்று 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 896 காலிப் பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி யு.பி. எஸ்.சி. வெளியிட்டது. இந்த தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5½ லட்சம் பேர் முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

முதல்நிலை தேர்வில் மொத்தம் 11 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றனர். தமிழகத்தில் 610 பேர் தேர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 20-ந்தேதி தொடங்கி 21, 22 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் 24 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னை யில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

முதன்மை தேர்வில் இறுதி தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விருப்ப தாள்-1, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப தாள்-2 ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு எப்படி இருந்து என்பது குறித்து தேர்வு எழுதிய சென்னை மந்தைவெளியை சேர்ந்த சி.ஏ. பட்டதாரி காயத்ரி கூறும்போது, “தேர்வு எளிதாக இருந்தது என்று சொல்லிவிட முடியாது. மூளைக்கு சற்று அதிகம் வேலை கொடுக்க வேண்டியிருந்தது” என்றார். நாமக்கல்லை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி சரவணக்குமார் கூறும்போது, “முதன்மை தேர்வு எளிதாக இருந்தது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்று, நேர்முக தேர்வை எதிர்கொள்வேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது என்னுடைய கனவு” என்றார்.

முதன்மை தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நேர்முக தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேய மையம் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் மனிதநேய மையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஜெய கோபால் கரோடியா பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில், முதன்மை தேர்வு நடைபெற்ற 5 நாட்களிலும் மனிதநேய மையம் சார்பில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.

முதன்மை தேர்வின் இறுதி நாளான நேற்று மதிய உணவாக புளிசாதம், தயிர்சாதம், உருளைக்கிழங்கு அவியல் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன. மனிதநேய மையத்தின் இந்த செயல்பாட்டினை தேர்வு எழுதிய பட்டதாரிகள் மனதார பாராட்டினார்.

Next Story