அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கிய விவகாரம் : சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?


அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கிய விவகாரம் :   சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?
x
தினத்தந்தி 30 Sep 2019 11:14 AM GMT (Updated: 30 Sep 2019 11:14 AM GMT)

சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமாவைத் தொடர்ந்து, அவர் மீதான புகார்கள் குறித்து உளவுத்துறையானது 5 பக்க அறிக்கையை கொடுத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த அறிக்கையில், சென்னை அருகே செம்மஞ்சேரி திருவிடந்தையில் லோரெய்ன் டவர் (Lorraine Tower) என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 பிளாட்டுகள் வாங்கிய தஹில் ரமானி, அதற்கான 3 கோடியே 18 லட்ச ரூபாய் தொகையை ஏற்பாடு செய்தது குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த 3 கோடியே 18 லட்ச ரூபாய் தொகையில், 1 கோடியே 62 லட்ச ரூபாய் எச்டிஎஃப்சி வங்கியில் பெற்ற கடன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடியே 56 லட்ச ரூபாய் தொகை, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சொந்த பணம் மூலம் தஹில் ரமானியால் வழங்கப்பட்டுள்ளது என ஐபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தஹில் ரமானி தொடர்புடைய 6 வங்கிக் கணக்குகளையும் உளவுத்துறை அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

தமது கணவருடன் இணைந்து மூன்று வங்கிக் கணக்குகளையும், தாயாருடன் இணைந்து ஒரு வங்கிக் கணக்கையும் சம்பளக் கணக்கு ஒன்றையும் தஹில் ரமானி பராமரித்து வந்ததாக  ஐபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மும்பை மாஹிம் கிளையில் தஹில் ரமானி பராமரித்து வந்த வங்கிக் கணக்கிற்கு, அவரது மகனது வங்கிக் கணக்கில் இருந்து 1 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த ஜூலை 8ஆம் தேதி, தஹில் ரமானி கணக்கிற்கு 18 லட்ச ரூபாய் தாயாருடன் இணைந்த வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்த மாதத்தில், இந்த 18 லட்ச ரூபாய் மீண்டும் செக் மூலம் தஹில் ரமானி அவரது தாயாருடன் இணைந்த வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என ஐபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வாக்குமிக்க நபர்கள் தொடர்புடைய, சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் 2018ஆம் ஆண்டு ஜூலையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு திடீரென கலைக்கப்பட்டதையும் ஐபி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, பல்வேறு வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தஹில் ரமானி  நடந்து கொண்டதாகவும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, உளவுத்துறை கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி  மீதான நடத்தை விதிமீறல் புகார்கள் உண்மையா என ஆராயுமாறு சிபிஐ-யிடம் சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, எந்த பிரச்சினை குறித்தும் இதுவரை தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், இந்த நிலையைத் தொடர்வது என்பதே தமது நிலைப்பாடு என்றும், தஹில் ரமானி கூறியுள்ளார். தமது தனிப்பட்ட வாழ்க்கையை தொந்தரவுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் தஹில் ரமானி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story