பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை: தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற - மத்தியபிரதேச வியாபாரி கைது


பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை:  தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற - மத்தியபிரதேச வியாபாரி கைது
x
தினத்தந்தி 1 Oct 2019 3:15 AM IST (Updated: 1 Oct 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை தமிழகத்தில் விற்பனை செய்த மத்திய பிரதேச மாநில வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் குஜராத் மாநிலத்தின் வழியாக கடத்திவரப்பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்ஷேட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. சங்கர் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரெங்கராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தமிழகத்தில் மட்டும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 12 கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன் (வயது34), அவரது உறவினர் நாகராஜ் (30), தஞ்சை பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா (32), நெல்லையை சேர்ந்த எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண திவாரி, பன்சிங் தாக்கூர் ஆகியோர் இந்த கள்ளத்துப்பாக்கிகளை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்து, தமிழகத்தில் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு துப்பாக்கியையும் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்துள்ளனர்.

சமீபத்தில் வியாபாரி கிருஷ்ண திவாரி கைது செய்யப்பட்டார். மற்றொரு வியாபாரி பன்சிங் தாக்கூர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தலைமறைவாக இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று முன்தினம் பன்சிங் தாக்கூரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்படாமல் உள்ள மேலும் 6 கள்ளத்துப்பாக்கிகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story