தபால் ஓட்டு, 3 சுற்று வாக்குகளை எண்ண வேண்டும்: ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தபால் ஓட்டு, 3 சுற்று வாக்குகளை எண்ண வேண்டும்: ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2019 5:45 AM IST (Updated: 2 Oct 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கு தபால் ஓட்டு, 3 சுற்று வாக்குகளை எண்ண வேண்டும். ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில், நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியிட்டனர்.

இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்றேன். என்னை எதிர்த்து அ.தி.மு.க., தரப்பில் போட்டியிட்ட ஐ.எஸ்.இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்றார். அதாவது என்னைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் அதிகாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனர். தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குகளில் பதிவான வாக்குகளை அதிகாரிகள் எண்ணத்தொடங்கினர்.

ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க. வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர். பிற்பகலில் தபால் வாக்குகளை எண்ணும்போது போலீசார் எங்களை வெளியேற்றி விட்டனர். மேலும் 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகள் எண்ணப்படும்போதும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதுவரை இருவரும் மாறி, மாறி முன்னிலை வகித்தோம். இந்தநிலையில் தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை.

இறுதியாக இன்பதுரை என்னைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். அதுபோல மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ராதாபுரம் தொகுதியில் நடந்த தேர்தலில் 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளின் போது பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும். எனவே, மீண்டும் இந்த வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக அந்த 3 சுற்றுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களையும், தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் வருகிற 4-ந்தேதிக்குள் ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை பதிவாளர், ஐகோர்ட்டு பதிவாளர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் இந்த வாக்குகளை எல்லாம் எண்ணவேண்டும். இதற்காக தேர்தல் பணியில் முன் அனுபவம் உள்ள 4 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம், இந்த இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்ல விரும்புவதால், மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து மனு தாக்கல் செய்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து இன்பதுரை சார்பில், உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அப்பாவு நாளைக்குள் (வியாழக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு அன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால், ‘வருகிற 4-ந்தேதிக்குள் வாக்கு எண்ணிக்கை எந்திரங்களை பத்திரமாக சென்னைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று. குறிப்பிட்ட எந்திரங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை சென்னைக்கு கொண்டுவர போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும். அதனால், ஓட்டு எந்திரங்கள், தபால் ஓட்டுக்களை தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க காலஅவகாசம் கூடுதலாக தேவை. மேலும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மறுவாக்கு எண்ணிக்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை வடகிழக்கு மாநிலங்களில் இருந்தா கொண்டுவரப் போகிறீர்கள்?. நெல்லையில் இருந்து தானே கொண்டுவர வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், ‘வாக்கு எந்திரங் களை சென்னைக்கு கொண்டுவருவது குறித்து நாளைக்குள் (வியாழக்கிழமை) தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

2016-ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்

- 2,39,942.

பதிவான வாக்குகள்

- 1,71,337

இன்பதுரை (அ.தி.மு.க.)

- 69,590

அப்பாவு (தி.மு.க.) - 69,541

எஸ்.கனிஅமுது

(பா.ஜனதா)- 11,131

எஸ்.சிவனணைந்த பெருமாள்

(தே.மு.தி.க.) - 8,362

எஸ்.லோபின்

(நாம் தமிழர் கட்சி) - 3,125

எஸ்.குருநாதன் (பா.ம.க.)

- 501

என்.கண்ணன்

(பகுஜன் சமாஜ் கட்சி) - 474

எஸ்.சுபாஷ்

(சிவசேனா)- 287

எஸ்.பி.உதயகுமார்

(சுயே)- 4,891

நோட்டா - 1,821

தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளருக்கு 863 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளருக்கு 200 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளருக்கு 60 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளருக்கு 34 வாக்குகளும், எஸ்.பி.உதயகுமாருக்கு 32 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 14 வாக்குகளும், பகுஜன் சமாஜ்வாடி மற்றும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு தலா ஒரு வாக்கும் பதிவாகி இருந்தன.

Next Story