மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை


மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2019 11:58 AM IST (Updated: 2 Oct 2019 11:58 AM IST)
t-max-icont-min-icon

150-வது பிறந்தநாளையொட்டி காந்தி சிலைக்கு கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு இருந்து மாணவ- மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி கிண்டி காந்தி மண்டபத்தை சென்றடைந்தது.

இன்று மாலையில் கிண்டி காந்தி மண்டபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் செய்தித்துறை சார்பில் புகைப்பட கண்காட்சியும், காந்தி பற்றிய திரைப்படமும் திரையிடப்படுகிறது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Next Story