தமிழக அதிமுக அரசை குறிவைக்கும் தமிழக பாரதீய ஜனதா ஐடி பிரிவு
அதிமுக அரசின் தவறான செயல்களை அம்பலப்படுத்தவும், குறைபாடுகளை முன்னிலைப்படுத்தவும் பாஜகவின் தமிழக பிரிவு தனது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளது.
சென்னை,
அதிமுக அரசின் தவறான செயல்களை அம்பலப்படுத்தவும், குறைபாடுகளை முன்னிலைப்படுத்தவும் பாஜகவின் தமிழக பிரிவு தனது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட்டு உள்ளது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால் , மக்கள் செல்வாக்கை பெற மாநில அரசைத் தாக்க வேண்டிய அவசியத்தை பாரதீய ஜனதா உணர்ந்து உள்ளது.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ். நரேந்திரன் ஆகியோர் மாநில அரசு குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஐடி பிரிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுவரை, ஆளும் அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது.
கடந்த மாதம் சென்னை சாலையில் 23 வயதான சுபாஸ்ரீ பேனர் விவகாரத்தில் மரணம் அடைந்ததில் இருந்து பாஜக ஐடி பிரிவு தனது கூட்டணி கட்சியான அதிமுகவை தாக்கி வருகிறது. தமிழக கட்சிகளால் கடைப்பிடிக்கப்படும் கட்-அவுட் கலாச்சாரத்திற்கு எதிராக பெரிதும் பேசியது.
கடந்த 10 நாட்களில், பாஜக மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை எடுத்துக்காட்டி வருகிறது.
"அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கவும், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தவும் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக லோக் ஆயுக்தாவை செயலில் ஈடுபடுத்தவும் நாங்கள் பிரசாரம் செய்கிறோம், ” என்று ஐடி பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.நிர்மல் குமார் கூறி உள்ளார்.
ட்விட்டர் @BJP4TamilNadu, கோயம்புத்தூரில் சட்டவிரோத மணல் சுரங்கத்தைப் பற்றிய பதிவுகளை மறு ட்வீட் செய்து, சட்டவிரோத மணல் சுரங்கத்திற்கு எதிரான ஐகோர்ட்டின் உத்தரவை மாநில அரசு ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தது.
மணல் மாஃபியாவை செயல்பட அரசாங்கம் ஏன் அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகங்களை குறிப்பிட்டு இருந்தது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், மதுரை மாவட்டத்தின் கவினிபட்டி கிராமத்தில் சாலை அமைக்காமல், சாலைப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்தது குறித்த பதிவை மறு ட்வீட் செய்தது.
"நாங்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் தவறான செயல்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், ஊழலை சரிபார்க்க லோக் ஆயுக்தாவை பயன்படுத்த மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம் " என்று ஆர்.நிர்மல் குமார் கூறினார்.
Related Tags :
Next Story