வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதற்கு வித்திட்டவர் நடிகர் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடம் உரையாடிய போது, மாணவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்க கூடாது என்றும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் நினைத்ததால் தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்றும் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் போல திடீரென வருவார் திடீரென காணாமல் போய்விடுவார் என்றார். மேலும் வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் தான் என்று நகைச்சுவையாக கூறினார்.
பிக்பாஸ் குறித்து பேசிய அவர், “பிக்பாஸ் ஒரு கலாச்சார சீரழிவு.அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பிக்பாஸ் இல்லம் ஒரு அலிபாபா குகை போல உள்ளது” என்றார்.
மற்றொரு பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக குறித்து, அந்த கட்சியினர் பலவீனம் அடையும் போது மொழியை ஆயுதமாக பயன்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் தமிழ் மொழியை கத்தி போல் கூர்மையாக இல்லாமல், கூழாங்கல் போல திமுக வைத்திருந்தது என்று குறிப்பிட்டார்.
தமிழக அரசு பேனர் வைக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பேனரை முறையுடன் வைக்க வேண்டும். எந்த இடையூறும் இல்லாமல் பேனர் வைப்பதில் தவறில்லை. அனுமதி மீறி பேனர் வைத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story