ஊரகப் பகுதிகளின் சுகாதார முன்னேற்றம்: இந்திய அளவில் தமிழகத்திற்கு முதலிடம்; பிரதமரிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருது பெற்றார்


ஊரகப் பகுதிகளின் சுகாதார முன்னேற்றம்: இந்திய அளவில் தமிழகத்திற்கு முதலிடம்; பிரதமரிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருது பெற்றார்
x
தினத்தந்தி 3 Oct 2019 5:00 AM IST (Updated: 3 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்தது. இதற்கான விருதை பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றார்.

சென்னை,

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து, தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2019 மூலம் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story