திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய சிசிடிவி பதிவுகள்: போலீசார் தீவிர விசாரணை


திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய சிசிடிவி பதிவுகள்: போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 Oct 2019 1:45 PM GMT (Updated: 3 Oct 2019 1:45 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள 2 புதிய சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன. அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர்.

கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது குழந்தைகள் விளையாடும் விலங்குகளின்  முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்து கொள்ளையடித்து இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வட மாநிலத்தவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்ற தகவல் கிடைக்கவே போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்தனர்.

அங்குள்ள தங்கும் விடுதியில் இருந்த வட மாநிலத்தவர் 5 பேரை அறையில் வைத்து காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்களில், அப்துல்லா சேக் என்பவர் அறைக்குள் நுழைந்த போது காவல்துறையினரை பார்த்ததும் 2-வது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றதால் தலையில் அடிபட்டது. அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மற்றவர்களிடம் திருச்சியில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கிற்கும், தற்போது பிடிபட்டுள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை என்று காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் தங்கிய அறைகளில் இருந்து 7 பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  திருச்சி நகைக்கடை கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட பைகள் போல் இந்த பைகளும் உள்ளன. திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களின் கூட்டாளிகளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி லலிதாஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் புதுக்கோட்டையில் கைதான வடமாநிலத்தவர்கள் கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாகவும், கேஸ் வெல்டிங்கிற்கான ரசீது வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக காவல்துறை புதியதகவல் தெரிவித்து உள்ளது. குழுவாக பிரிந்து  இவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி நகைக்கடை நகை கொள்ளை தொடர்பாக 2 புதிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. கொள்ளையர்கள் நகை திருடும் காட்சிகள் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தரையோடு தரையாக ஊர்ந்து நுழைவதும் ஷோ கேசில் உள்ள நகைகளை எடுப்பதும் அதில் பதிவாகியுள்ளது. வடமாநிலத்தவர்கள் உட்காருவது போல் உட்கார்ந்து நகைகளை ஒன்றொன்றாக எடுத்து பைக்குள் வைக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.

Next Story