தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்


தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Oct 2019 2:30 AM IST (Updated: 4 Oct 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓ.என்.ஜி.சி. திணிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், காவிரி பாசன மாவட்டங்களின் செழுமையை பாதுகாக்கும் வகையிலும் அங்கு இனி எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஓ.என்.ஜி.சி சார்பில் 44 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தரமாக பாதுகாக்க அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூன் 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், கரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி பாய்ந்தோடும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளை பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, பாலைவனம் ஆக்கும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருவதும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு கள்ளத்தனமாக துணை போய், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story