கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை பொதுமக்கள் நேரடியாக பார்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : தொல்.திருமாவளவன்
கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை பொதுமக்கள் நேரடியாக பார்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தொல்லியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அகழாய்வு நடைபெறும் இடங்களை பார்க்க வருகின்றனர்.
பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, அங்கு பணியாற்றுபவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கீழடி அகழாய்வை பார்வையிட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி. ரோஹித்நாத் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன்படி அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடலாம். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை பொதுமக்கள் நேரடியாக பார்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கீழடி ஆய்வு முழுமை பெறவில்லை என்பதால் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கீழடி 3-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். கீழடி அகழாய்வில் கிடைத்தவற்றை பாதுகாக்க மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story