சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு
சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார். அன்று பகல் 1.30 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேரும் ஜின்பிங்குக்கு அங்கு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் பகல் 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். ஓட்டலில் ஓய்வு எடுக்கும் சீன அதிபர் மாலை 4 மணிக்கு காரில் மாமல்லபுரம் செல்கிறார்.
இதேபோல் அன்று சென்னை வந்து சேரும் பிரதமர் மோடியும் மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரம் போய்ச் சேர்ந்ததும் அங்கு இரு தலைவர்களும் மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார்கள். மாலை 5.20 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். மாலை 5.45 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார்கள். பின்னர் கலை நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதன்பிறகு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்கள். பின்னர் இரவு 9 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி வந்து ஓட்டலில் தங்குகிறார்.
இந்நிலையில் தற்போது சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில், முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நைஜீரிய இளைஞர் தலைமறைவு ஆகி விட்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நைஜீரிய இளைஞரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story