வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெற்று வாக்குறுதிகள்
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைவது மட்டுமின்றி, வைப்புத்தொகை கூட வாங்க முடியாதோ? என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவை தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளி ஆக்கிய மு.க.ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.
அப்பாவி தி.மு.க. தொண்டர்கள் அல்ல
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரது மகன் ஏ.ஜி.சம்பத்தை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து நன்றி கூற வைத்த மு.க.ஸ்டாலின், இரு வாரத்திற்கு முன் அதே சம்பத் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தபோது அவருக்கு வாய்ப்பு வழங்கி ஏ.கோவிந்தசாமி மீதான விசுவாசத்தை நிரூபித்து இருக்கலாமே?.
1996-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ஏ.கோவிந்தசாமியின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக்கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி தி.மு.க. தொண்டர்கள் அல்ல.
பா.ம.க.வுக்கு வென்றெடுக்கும் சக்தி
தேர்தலின்போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கும் வன்னியர்கள் கறிவேப்பிலை அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பா.ம.க.வுக்கு உண்டு.
மற்றபடி, 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால் அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட “சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா” என்ற பழமொழியை தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story