கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய திருடன் கைது
விழுப்புரத்தில் கொள்ளையடிக்கச்சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோ(வயது 56). இவர் தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 18-ந்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது இவருடைய வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த ஒருவர், வீட்டின் 2-வது மாடியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினார். இந்த காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
கைது
இதுகுறித்து ஆசிரியர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் (32) என்பதும், கொள்ளையடிப்பதற்காக ஆசிரியர் இளங்கோ வீட்டில் புகுந்ததும், அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருட முயன்றபோது நாய் குரைத்துள்ளது. அதற்கு பயந்து வீட்டின் மாடிக்குச்சென்றவர் அங்கிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் ஆடிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சச்சிதானந்தத்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story