நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-
பணம் கொடுத்து...
கேள்வி:- விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலுக்கு உண்டான களச்சூழல் எவ்வாறு உள்ளது?, அங்கு நிச்சயமாக பணம் தான் வெல்லும் என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறாரே?
பதில்:- அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை, அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் 2 தொகுதிகளிலும் மக்களின் செல்வாக்கோடு நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுடைய கூட்டணி கட்சிகள் மிகச்சிறப்பாக எங்களுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
வன்னியருக்கு இடஒதுக்கீடு
கேள்வி:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. ஏற்கனவே உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது எதுவும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுடைய ஆட்சியில் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு காலம் மறந்துவிட்டார் என நான் நினைக்கிறேன். எங்களை பொறுத்தவரைக்கும் ஒடுக்கப்பட்ட, தாழ்த் தப்பட்ட மற்ற வகுப்பினருக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விகிதாச்சார முறையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டத்தின் வாயிலாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெற்றுத்தந்து இருக்கிறார்.
மேகதாது அணை
கேள்வி:- மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு மீண்டும் மத்திய அரசை அணுகி இருக்கிறார்களே?
பதில்:- மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று ஏற்கனவே நாம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இப்போது இருக்கின்ற அரசுக்கு முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்தது.
அந்த காலகட்டத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த சிவக்குமார், மேகதாது அணை கட்டப்படும் என்று அந்த இடத்திற்கு சென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதனை நாங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மேகதாது அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிலும் கோரிக்கை வைத்துள்ளேன். இதுகுறித்து 2018-ம் ஆண்டு அக்டோபர் 8, நவம்பர் 27-ந் தேதிகளிலும், கடந்த ஜூன் 15, 24-ந் தேதி மற்றும் ஆகஸ்டு 10 ஆகிய தேதிகளில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும், பிரதமரை நேரில் சந்தித்தபோதும் கோரிக்கை மனு அளித்துள்ளேன்.
அதில், மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது, அதனால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அந்த அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த ஜூலை 19-ந் தேதி கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
கேள்வி:- பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே?
பதில்:- அது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதில் தலையிட இயலாது.
டெங்கு காய்ச்சல்
கேள்வி:- தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வந்ததை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- டெங்கு பிரச்சினை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்துகொண்டோம். 10 ஆயிரம் பேர் அங்கே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தெலுங்கானாவில் 9 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா பகுதிகளில் இருந்துதான் நம்முடைய பகுதிகளில் அதிகமாக பரவி இருக்கிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக எனது தலைமையில் 2 முறை, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Related Tags :
Next Story