நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்


நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:51 AM IST (Updated: 9 Oct 2019 11:51 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாங்குநேரி,

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று நாங்குநேரியில் பல கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “ஆளும் கட்சியினர்தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாகிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இன்றும் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். நொச்சிக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில்  திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த அவர் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறினார்.

நொச்சிகுளத்தில் பேசிய போது, கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருவதாக விமர்சித்தார்.  நாங்குநேரி தொகுதி கிருஷ்ணாபுரத்தில் பேசுகையில், “சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள்” என்று கூறினார்.

Next Story