கணவனின் முதல் மனைவியின் ஆறு வயது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த சித்தி


கணவனின் முதல் மனைவியின் ஆறு வயது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த சித்தி
x
தினத்தந்தி 9 Oct 2019 2:01 PM IST (Updated: 9 Oct 2019 3:56 PM IST)
t-max-icont-min-icon

கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால் சொந்த சித்தியே ஆறு வயது சிறுமியை மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்த பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சூரியகலாவிற்கும் பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பார்த்திபனுக்கு பிறந்த ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

2வது திருமணமானதில் இருந்தே ராகவி மீது கோபமும், வெறுப்பும் கொண்ட சூரியகலா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து  வந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் சிறுமி ராகவி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். நேற்று பாட்டி வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் ராகவி தனது சித்தியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ராகவியை 2 மணி நேரமாக காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு தகவலளித்துள்ளார். உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார்.

அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் மாடியில் இருந்து குழந்தை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் ராகவி மீது சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி வந்ததை அருகில் உள்ளவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து சூரியகலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

தனது கணவனின் முதல் மனைவி குழந்தையான ராகவி மீது இருந்த வெறுப்பு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த சிறுமியின் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்ததாகவும், சிறுமி மயக்கமடைந்ததும் தூக்கிச் சென்று மூன்றாவது மாடியில் இருந்து வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசி எறிந்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, சூரியகலாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால் சொந்த சித்தியே ஆறு வயது சிறுமியை அடித்து மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story