பணக்கார மாநில கட்சிகள் பட்டியலில் அ.தி.மு.க.வை முந்தியது தி.மு.க. தேசிய அளவில் சமாஜ்வாடி கட்சிக்கு முதல் இடம்


பணக்கார மாநில கட்சிகள் பட்டியலில் அ.தி.மு.க.வை முந்தியது தி.மு.க. தேசிய அளவில் சமாஜ்வாடி கட்சிக்கு முதல் இடம்
x
தினத்தந்தி 10 Oct 2019 4:45 AM IST (Updated: 10 Oct 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

பணக்கார மாநில கட்சிகளின் பட்டியலில் அ.தி.மு.க.வை தி.மு.க. முந்தியிருக்கிறது. தேசிய அளவில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சொத்து விவரம், வரவு-செலவு கணக்கு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவேண்டும்.

அதன் அடிப்படையில் கிடைக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து உள்ள அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை ஆண்டுதோறும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்களின் சங்கம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை அந்த சங்கம் வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

சமாஜ்வாடி முதல் இடம்

அதன் விவரம் வருமாறு:-

2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320.06 கோடியாக இருந்தது. கடந்த 2016-17-ம் ஆண்டு 39 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,267.81 கோடியாக இருந்தது. ரூ.583.28 கோடி சொத்து மதிப்பினை பெற்று தேசிய அளவில் பணக்கார கட்சி பட்டியலில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு ரூ.571.12 கோடியாக இருந்தது. அதன்படி 2017-18-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு 2.13 சதவீதம் உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வை முந்தியது தி.மு.க.

இதற்கு அடுத்தபடியாக பணக்கார மாநில கட்சி பட்டியலில் தி.மு.க. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அ.தி.மு.க.வும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு தி.மு.க.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு தி.மு.க.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது. தற்போது அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, தி.மு.க. முந்தியிருக்கிறது.

பா.ம.க.-தே.மு.தி.க.

பா.ம.க. உள்ளிட்ட சில மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு எதிர்மறையாக குறைந்திருக்கிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் பா.ம.க.வின் சொத்து மதிப்பு ரூ.2.63 கோடியாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு ரூ.2.59 கோடியாக குறைந்திருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு சொத்து மதிப்பு ரூ.67 லட்சமாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு 87 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 28.5 சதவீத உயர்வு ஆகும்.

இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story