ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு தரையில் அமர்ந்து நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தார்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தரையில் அமர்ந்து அவர் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவி உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
8 பிரிவுகளில் குற்றச்சாட்டு
இந்த நிலையில் நேற்று நீதிபதி பரிமளா, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது, அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டு சதி செய்தது உள்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளை 3 பேரும் செய்தது உண்மையா? என கேட்டார்.
அப்போது 3 பேரும் தாங்கள் இந்த குற்றத்தை செய்யவில்லை எனவும், இது பொய் வழக்கு எனவும் தெரிவித்தனர். மேலும், நிர்மலாதேவி, மாணவிகளை குழந்தையாக பார்த்து வருவதாகவும், அவ்வாறு எந்த தவறும் செய்யவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார். பின்னர் 3 பேரும் வருகிற 23-ந் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
மயக்கம்
முன்னதாக கோர்ட்டில் காத்திருந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர். பெண் போலீசார் அவருக்கு முதலுதவி அளித்தனர். கோர்ட்டில் விசாரணையின் போது நிர்மலாதேவி தரையில் அமர்ந்து இருந்தார். நீதிபதி கேள்விகள் கேட்டபோது தரையில் அமர்ந்தபடியே பதில் கூறினார்.
விசாரணை முடிந்த பிறகு சிலர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. நடந்து சென்று நிர்மலாதேவி அதில் ஏறினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு அங்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து அவர் கிளம்பிச் சென்று விட்டார்.
வக்கீல் பேட்டி
நிர்மலாதேவி சார்பில் ஆஜரான அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிர்மலாதேவிக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. தனது பிள்ளைகளுக்கு ஆபத்து வந்து விடுமோ என அவர் பயப்படுகிறார்.
இது முற்றிலும் பொய்யான வழக்கு. நிச்சயம் நிர்மலாதேவி விடுதலை ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story