மாநில செய்திகள்

மோடி-சீன அதிபர் வருகையையொட்டிசென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் + "||" + 2 days traffic change in Chennai

மோடி-சீன அதிபர் வருகையையொட்டிசென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மோடி-சீன அதிபர் வருகையையொட்டிசென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி சென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோடி-சீன அதிபர் வருகை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சென்னை வருகை தர உள்ளனர். எனவே நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின்போது, ஜி.எஸ்.டி. சாலை(சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை(கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை

மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் 2 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.

இதுதவிர மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின்போது கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும். அதாவது, நாளை மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் ‘ஜீரோ பாயிண்ட்’ சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

மேலும் சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக, குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம். தாம்பரம்- குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

முட்டுக்காடு செல்ல அனுமதி இல்லை

அதேபோன்று, நாளை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில்(ஓ.எம்.ஆர்.) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி இல்லை.

நாளை மறுதினம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில்(ஓ.எம்.ஆர்.) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும். மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.