மாமல்லபுரத்தை தேர்வு செய்த ஜின்பிங்!


மாமல்லபுரத்தை தேர்வு செய்த ஜின்பிங்!
x
தினத்தந்தி 10 Oct 2019 12:00 AM GMT (Updated: 9 Oct 2019 11:06 PM GMT)

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு ஜின்பிங் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளின் பார்வை, மாமல்லபுரத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பின்னே? உலகின் இரு முன்னணி நாடுகளான இந்தியாவின் பிரதமர் மோடியும், சீனாவின் அதிபர் ஜின்பிங்கும் நாளையும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை) அங்கு சந்தித்து பேசப்போகிறார்கள் என்பது வரலாற்று நிகழ்வாக பதிவாகப்போகிறது.

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. இந்த இரு பெரும் தலைவர்களின் சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார், எப்படி என்பதுதான் அந்தக் கேள்வி.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதன்முதலாக முறைசாரா உச்சிமாநாடு என்ற பெயரில் சீனாவின் வூகன் நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28-ந் தேதி சந்தித்து பேசினர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு நமது மாமல்லபுரத்தில் நடக்கிறது.

பொதுவாக வெளிநாட்டுத்தலைவர்கள் யார் இந்திய பயணம் மேற்கொண்டாலும், அவர்கள் டெல்லி வருவதும் அங்கே அவர்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசுவதுதான் காலம் காலமாக மரபாக இருந்து வந்தது.

ஆனால் பிரதமராக முதல் முறை மோடி பதவி ஏற்ற பின்னர் இதில் அவர் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். அது, வெளிநாட்டு தலைவர்களை தலைநகருக்கு வெளியே அழைத்துச்சென்று சந்திப்பதாகும். இது அந்த தலைவர்களுக்கும் ஒரு மாற்றமாக அமைந்தது. இந்தியாவின் பல தரப்பட்ட மாநிலங்களுக்கு, நகரங்களுக்கு செல்கிறபோது அங்குள்ள கலாசாரம், பண்பாட்டினை அந்த தலைவர்கள் நேரில் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

வெளிநாட்டு தலைவர்களின் வருகையால், அவர்கள் வரக்கூடிய நகரங்கள் புத்துயிரூட்டப்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

பிரதமராக மோடி முதன்முதலாக பதவி ஏற்றபின்னர், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்தபோது, அவருடனான சந்திப்பை பெங்களூருவில் நடத்தினார்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தபோது ஆமதாபாத்தில்தான் அவருடனான சந்திப்பை பிரதமர் மோடி வைத்துக்கொண்டார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே வந்தபோது, ஆமதாபாத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்தபோது, அவருடனான சந்திப்பை பிரதமர் மோடி வாரணாசியில் நடத்தினார்.

இப்போது அந்த வரிசையில்தான் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி 2-வது முறைசாரா உச்சிமாநாட்டை மாமல்லபுரத்தில் நடத்த முடிவானது.

தமிழ்நாட்டுக்கு, அதுவும் மாமல்லபுரத்துக்கு நமது நாட்டின் தலைவரும், சீன நாட்டின் தலைவரும் வருவது நமக்கெல்லாம் நிச்சயம் பெருமைதான்.

ஆனாலும் நாடு முழுவதும் எத்தனையோ பெரிய பெரிய நகரங்கள் இருக்கின்றன. அத்தனையையும் விட்டு விட்டு இந்த மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வாக அமைந்திருக்கிறது.

மாமல்லபுரத்தை சீன அதிபர் ஜின்பிங்தான் தேர்வு செய்திருக்கிறார். மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பெருமை, கலாசார பெருமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

அவர் மாமல்லபுரம் என்ற உடனேயே பிரதமர் மோடியும் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார். அவருக்கு வெளிநாட்டு தலைவர்களை டெல்லிக்கு வெளியே சந்திப்பது ஒன்றும் புதிது இல்லையே.

வரலாற்றில் கொண்ட ஆர்வம் காரணமாகத்தான் சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியை வூகன் நகரில் சந்தித்து பேசி உள்ளார். வூகன் நகரைப் பொறுத்தமட்டில் அது ஒரு காலத்தில் (1927) சீனாவின் தலைநகராக இருந்து இருக்கிறது. 1937-ல் சீனாவின் போர்க்கால தலைநகரமாக வூகன் இருந்து இருக்கிறது. பிற முன்னணி நகரங்களுடன் சாலைகள், விரைவுச்சாலைகள், ரெயில் தடங்கள் இந்த நகரின் வழியாக செல்வதால் இது சீனாவின் சிகாகோ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் பல பெருமைகளை கொண்டுள்ளதால்தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க நகருக்கு பிரதமர் மோடியை ஜின்பிங் கடந்த ஆண்டு அழைத்துச்சென்று சந்தித்தார்.

இப்போது மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பின்னணியையும், கலாசாரத்தையும் அறிந்துதான் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு ஜின்பிங் இந்த மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாமல்லபுரம் பார்வைக்கு சிறிய நகரமாக தெரிந்தாலும், பல்லவ சாம்ராஜ்யத்தில் 7-ம் நூற்றாண்டிலும், 8-ம் நூற்றாண்டிலும் அங்கு கட்டப்பட்ட குடைவரை கோவில்களும், கடற்கரை கோவில்களும், ரதங்களும், நினைவுச்சின்னங்களும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்களும் காலத்தால் அடித்துச்செல்லப்படவில்லை. இன்றைக்கும் அவை, அவற்றுக்கே உரித்தான கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கின்றன.

1984-ம் ஆண்டு உலக பாரம்பரிய இடத்தின் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இத்தனை சிறப்புமிக்க மாமல்லபுரம், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் இன்னும் பிரபலம் ஆகும். சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக மாமல்லபுரம் மாறுவதற்கு இந்த இருபெரும் தலைவர்களின் சந்திப்பு அஸ்திவாரமாக அமையப்போகிறது. அந்த வகையில் தமிழர்களின் நாகரிகமும், கலாசாரமும், பண்பாடும் உலகமெங்கும் பரவுவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

Next Story