சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது: ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது: ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 10 Oct 2019 7:48 PM IST (Updated: 10 Oct 2019 7:48 PM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால்,எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

சென்னை குரோம்பேட்டை, நெமிலிச்சேரியை சேர்ந்த ரவியின் மகள் சுபஸ்ரீ, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த மாதம் 12-ந் தேதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை ரேடியல் சாலை வழியாக சென்றபோது, அங்கு அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று, அவர் மீது விழுந்தது.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொடிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இது குறித்து, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், சட்டவிரோதமாக பேனர் வைத்தவர்களை தடுக்காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகள் உயிர்ப்பலிக்கு இழப்பீடாக ரூ.1 கோடி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கில் அவர், “எனது மகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றுபவர். அவர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துதான் பயணம் செய்தார். சட்ட விரோதமாக சாலைக்கு நடுவே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் தடுக்கவில்லை. அவர்கள் கடமை செய்ய தவறி விட்டனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கினால், என் மகள் மரணம் அடைந்தார். என் மகள் மரணத்துக்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் 24-ந் தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே, ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரணவன் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்க போலீஸ் கமிஷனருக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விட்டனர். 

பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டு விட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்பட வில்லை’ என்று கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று கருத்து கூறினர்.

பின்னர் நீதிபதிகள், ‘ஏற்கனவே, சுபஸ்ரீ மரணம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எ ம் . ச த் தி ய நாராயணன்,  என்.சேஷசாயி ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்குடன் இந்த வழக்கை விசாரிக்க அதே அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story