மாநில செய்திகள்

குரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்?டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் + "||" + TNPSC Description

குரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்?டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்?டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்? என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்து உள்ளது.
சென்னை,

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்வு முறையை மாற்றியது ஏன்? பாடத்திட்டம் மாற்றத்தினால் என்ன பயன்? என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரிப்பணம் வீணாகிறது

குரூப்-2, குரூப்-2ஏ என 2 பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயமும், பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகிறது. மேலும் விண்ணப்பதாரர்களும் 2 முறை தேர்வுக்கு தயாராக வேண்டி இருக்கிறது. எனவே 2 தேர்வுகளுக்கு ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்நிலை தேர்வில் பொது தமிழ், பொது ஆங்கிலம் வினாக்கள் கேட்கப்பட்டு வந்தன. தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால், பொது தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதில் 2 அலகுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

தமிழுக்கு முக்கியத்துவம்

முதல்நிலை தேர்வில் நீக்கப்பட்ட பொது தமிழ், பொது ஆங்கிலம் பகுதிகள் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதன்மை எழுத்து தேர்வில் தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசை பாரம்பரியம், நாடகக்கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.