தமிழ் மொழியை வளர்க்க சீனாவில் 4 இடங்களில் தமிழ் வளர் மையங்கள் உருவாக்க திட்டம் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேச்சு


தமிழ் மொழியை வளர்க்க சீனாவில் 4 இடங்களில் தமிழ் வளர் மையங்கள் உருவாக்க திட்டம் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 9:21 PM GMT)

தமிழ் மொழியை வளர்க்க சீனாவில் 4 இடங்களில் தமிழ் வளர் மையங்கள் உருவாக்க திட்டமிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டு இருப்பதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசினார்.

சென்னை,

சீன வானொலி தமிழ்ப்பிரிவு சார்பில் சீனா-இந்தியா இடையே பண்பாட்டை வலுப்படுத்தும் விதமாக சென்னை அண்ணா சாலை, பின்னி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

இதில் சீன வானொலி பிரிவு தலைவர் ஷன்ஜிங்லி, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள்(இவருடைய சீன பெயர் சாவ்ஜியாங்), தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் இயக்குனர் தங்க.காமராஜ், இந்திய சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் தங்க.ஜெய்சக்திவேல் மற்றும் சீன வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நிலானி, பூங்கோதை உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றாக இணைய வேண்டும்

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:-

இந்தியா-சீனா உறவில் முன்பு எழுச்சி இருந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக நம் உறவில் தளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறார். இந்த மாற்றத்தை இரு நாட்டு தலைவர்களும் செய்து காட்டுவார்கள்.

இந்த இருபெரும் சமுதாயங்கள் (2 நாட்டு மக்கள்) அமைதியாக, அழகாக ஒருங்கிணைந்து கட்டமைத்தோம் என்றால், உலகத்தில் நம்மை மிஞ்சிய சக்தி எதுவும் கிடையாது. இந்த 2 சக்திகளும் ஒன்றாக இணைய வேண்டும். திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்ப்பு செய்த யூசிக்கு தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

தமிழ் வளர் மையங்கள்

சீனாவில் தமிழை கொண்டு செல்வது எளிதான விஷயமாக இருக்கலாம். அதேசமயத்தில் சீன மொழியை மத்திய பள்ளிகளில் விருப்ப பாடமாக படிப்பதற்கு சீன அரசாங்கம் சிறிய முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சீன ஒற்றுமை குறித்த ஆய்வுகளை எடுத்து கொண்டு போக உள்ளோம்.

தமிழ் மொழியை வளர்க்க உலகெங்கிலும் 1,000 தமிழ் வளர் மையங்கள் அமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், ஜாங்ஷூ ஆகிய 4 இடங்களில் தமிழ் வளர் மையங்களை உருவாக்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அந்த நிதி வந்ததும், அங்கே தமிழ் கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியர்கள் அல்லது தமிழ் கற்றுக்கொடுக்கும் சீனர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும். இந்த பண்பாட்டு தொடர்பு வரலாற்று கட்டாயம்.

நமக்கும், சீனாவுக்கும் இடையே பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. நம்முடைய உறவு வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும், தமிழை மேலும் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் அகராதியையும் அமைச்சர் கே.பாண்டியராஜன் சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கீழடி அருங்காட்சியகம்

அதனையடுத்து அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.14 கோடி நிதி கேட்டு இருக்கிறோம். அதை மத்திய அரசு வழங்கவில்லை என்றாலும், என்ன செலவு ஆகிறதோ? அதை மாநில அரசு ஒதுக்கி தரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். கீழடியில் உலக புகழ்பெற்ற அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும். தமிழர் பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் அளவுக்கு 6 மாதத்தில் அதை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்தில் திருமலைநாயக்கர் மஹாலில் அந்த அரும்பொருட்களை கொண்டு வர உள்ளோம்’ என்றார்.

Next Story