தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை


தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 9:31 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரெத்தினமணி(வயது25), முருகன்(40), சரவணன்(25) ஆகிய 3 பேரும், கள்ளிவயல்தோட்டம் முகமது முகைதீன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த உதயா(28), இலக்கியன்(30), கனகராஜ்(34), கலைதாசன் (30) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் காலை மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மல்லிப்பட்டினத்தில் இருந்து 20 கடல்மைல் தொலைவில் ரெத்தினமணி, முருகன், சரவணன், உதயா, இலக்கியன், கனகராஜ், கலைதாசன் ஆகிய 7 பேரும் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அவர்கள் தமிழக மீனவர்கள் 7 பேரிடமும், எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறினர். பின்னர் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 7 பேரையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

பரபரப்பு

சிறிய வகை படகான பைபர் படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பெரும்பாலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. கரையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பி விடுவார்கள்.

இந்த நிலையில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக சிறைபிடித்து சென்றிருப்பது மல்லிப்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க செய்ய தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story