மேகதாது அணை விவகாரம்: மத்திய மந்திரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் “கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”


மேகதாது அணை விவகாரம்: மத்திய மந்திரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் “கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”
x
தினத்தந்தி 10 Oct 2019 11:45 PM GMT (Updated: 10 Oct 2019 10:26 PM GMT)

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மத்திய நீர் வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் முன்அனுமதியைப் பெறாமல், காவிரி ஆற்றுப்படுகையில் கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்டுவது உள்பட வேறு எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய நீர்வளத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று உங்களுக்கு நான் ஏற்கனவே கடந்த ஜூலை 10-ந்தேதியன்று கடிதம் எழுதியிருந்தேன்.

ஏனென்றால், அது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக அமைந்துவிடும்.

சரியான கணக்கீடு

காவிரி படுகையில் இருக்கும் நீரின் அளவு, காவிரி படுகையின் கீழ் நிலைப்பகுதி மாநிலங்கள் மாதாமாதம் குறிப்பிட்ட அளவில் நீரை பகிர்ந்து கொடுக்கவும், தேக்கி வைக்கவும் சரியாக உள்ளது என்று காவிரி நடுவர் மன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் கணக்கிட்டுள்ளது.

எனவே மேகதாது நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கு கர்நாடக அரசு வைத்துள்ள முன்மொழிவு தேவையற்ற ஒன்று மட்டுமல்லாமல், மொத்தமாக நிராகரிக்கக் கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்ல, அந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை தமிழகம் உள்ளிட்ட காவிரி ஆறு பாயும் மற்ற மாநிலங்களிடம் இருந்து கர்நாடகம் பெறவில்லை.

வழக்குகள் நிலுவை

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முன்மொழிவை எதிர்த்து மனு ஒன்றையும், இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை அங்கு இன்னும் நிலுவையில் உள்ளன.

கடந்த ஜூலை 19-ந்தேதியன்று நடந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை முன்மொழிவை ஆற்றுப்படுகை மற்றும் புனல் மின்சாரத் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக்குழு தள்ளி வைத்துவிட்டது.

நிராகரிக்க வேண்டும்

இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் திட்ட அறிக்கைக்கான ஒப்புதலைக் கேட்டு நிபுணர் மதிப்பீட்டுக் குழுவை கர்நாடக அரசு மீண்டும் அணுகி இருப்பதாக தமிழகத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றின் குறுக்கே, மற்ற மாநிலங்களிடம் குறிப்பாக தமிழகத்திடம் அனுமதி கேட்காமல் எந்தவொரு நீர்த்தேக்கத்தையும் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை கிடையாது என்பதால், மேகதாது அணை கட்டுமான திட்டத்துக்கு கடுமையான ஆட்சேபனையை தமிழக அரசு மீண்டும் தெரிவிக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையை நீங்கள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான மேற்கோள் குறிப்புக்கு அனுமதிக்கேட்டு கர்நாடக அரசு வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு உத்தரவிட அந்தத் துறையை அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கடிதம்

இதுபோல் மற்றொரு கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ளார்.

Next Story